அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை ஒருபோதும் நாம் மீறவில்லை. அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய விடயங்களை வெளியில் விமர்சிப்பது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு என்றால், அமைச்சரவையில் இரகசியமான தீர்மானங்களை முன்னெடுப்பதும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடென அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அமைச்சுப்பதவிகளை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தயக்கமின்றி தீர்மானம் எடுப்போம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் விதத்தில் அமைச்சர்கள் சிலர் செயற்படுவதாகவும் அவர்கள் அமைச்சுப்பதவிகளை துறந்து அரசாங்கத்தை விட்டு வெளியில் சென்று தமது விமர்சனங்களை முன்வைக்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் தெரிவித்திருந்த நிலையில், குறித்த விமர்சனத்தை எதிர்கொள்ளும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர்கள் இவ்வாறு கூறினர்.

இது குறித்து அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில், நாட்டில் நிதி நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கு இல்லை. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நாம் வெளிப்படையாக தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை. 

அதேபோல் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை நாம் ஒருபோதும் மீறவில்லை. அமைச்சரவையில் ஒரு சில தீர்மானங்கள் மறைமுகமாக முன்னெடுக்கப்படுகின்றது என்றால், இரகசிய ஆவணங்கள் கைச்சாத்திடப்படுகின்றது என்றால், அமைச்சர்களுக்கு தெரியாது அமைச்சரவையில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் அதுவும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடாகும். அதனை நாமும் கேள்விக்கு உற்படுத்த முடியும். 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாம் அரசாங்கத்தை குழப்பியடிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. மாறாக அரசாங்கம் விடும் சில தவறுகளை திருத்திக்கொண்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், நாட்டுக்கு உகந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுமே கடமைப்பட்டுள்ளோம். அமைச்சரவைக்குள் நாம் அங்கம் வகிப்பது எவருக்கும் தடையாக உள்ளது என்றால் அதனை எம்மால் பெரிதுபடுத்த முடியாது. 

ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நினைத்தால் எமது அமைச்சுப்பதவிகளை மாற்றவோ அல்லது அமைச்சுப்பதவியில் இருந்து எம்மை நீக்கவோ முடியும். அதனை நாம் விமர்சிக்கப்போவதில்லை. அதேபோல் அமைச்சுப்பதவிகளை எதிர்பார்த்து நாம் அரசியல் செய்யவும் இல்லை. அமைச்சுப்பதவிகள் இல்லை என்றாலும் எம்மால் மக்கள் நலன்சார் அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என்றார்.

இது குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவுடன் கைகோர்த்து ஆட்சியை உருவாக்கும் போராட்டத்தில்  எம்மை இணைத்துக்கொண்ட போதே இந்த நாட்டிற்கு பொருந்தாத, எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் எந்த செயற்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு கொடுத்துள்ளோம். அதற்கமையவே இன்றுவரை நாம் எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். 

அமைச்சரவையில் நடைபெறும் சகல விவகாரங்களையும் நாம் வெளியில் விமர்சிக்கவில்லை. அமைச்சரவையில் மறைமுகமாக எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து எம்மத்தியில் இணக்கப்பாடு இல்லை. அதனை அமைச்சரவையிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பியும் எமக்கான பதில் கிடைக்காத நிலையிலேயே எம்மால் வெளியில் விமர்சிக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி எடுக்கும் பல தீர்மானங்கள் வேறு சில நபர்களினால் மாற்றப்படுகின்றன. 

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் குழப்பியடிக்கப்படுகின்றது. இவற்றை கேள்வி கேட்கும் எம்மை அரச விரோதிகள் என்றோ அல்லது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் நபர்கள் என்றோ கூறுவதாயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 

எம்மை பொறுத்தவரை அமைச்சுப்பதவிகளை விடவும், அதிகாரத்தை விடவும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளும் மக்களின் நிலைப்பாடும் முக்கியமானதாகும். மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் நாம் அச்சுறுத்தல்களுக்கோ அல்லது சலுகைகளுக்கோ அடிபணியப்போவதில்லை என்றார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இது குறித்து கூறுகையில், அமைச்சரவை கூட்டுப்பொறுப்பு குறித்து பேச முன்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் குறித்து பேச வேண்டும். நாட்டின் தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் தீர்மானங்களை இந்த அரசாங்கம் மேற்கொள்ள முடியாது. 

அவ்வாறான தீர்மானங்களை முன்னெடுக்கும் நேரத்தில் அதனை எதிர்த்து நாம் கேள்வி கேட்காமலும் இருக்க முடியாது. இது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடாக தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். 

அமைச்சரவைக்குள் வெவ்வேறு விடயங்களில் பல அமைச்சர்களுக்கு இடையில்  கருத்து முரண்பாடுகள் ஏற்படும், கேள்வி எழுப்புவார்கள். அதனையே நாமும் முன்னெடுத்து வருகின்றோம். அமைச்சுப்பதவிகளை துறக்க வேண்டும் என்றால் அதனை துறக்கவும்  தயாராகவே உள்ளோம். அமைச்சுப்பதவிகளை விடவும் எமது தூய அரசியல் கொள்கையே எமக்கு  முக்கியமானது என்றார்.