அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவதாக ஜனாதிபதியோ அல்லது வேறு எந்தவொரு நபரோ அறிவிக்கவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கான எதிர்பார்ப்பு தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தாம் உட்பட அமைச்சர்களான வாசு தேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பாராயின் எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற நிலையிலும் யுகதனவி ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றதோடு அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமை தவறானதென ஜனாதிபதி தெரிவித்ததாக இன்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த போதே அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிக்கைகளின் செய்தி ஆசிரியர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு கருத்துரைத்ததாக இன்றைய தேசிய நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டன.

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டுமாயின் அமைச்சுப் பதவியிலிருந்து விலகி அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில, தாம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களும் யுகதனவி விடயத்தில் தவறிழைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தவறிழைத்திருந்தால் மாத்திரமே பதவியிலிருந்து விலக வேண்டும்.

அத்துடன் அமைச்சுப் பதவியைக் காட்டிலும், நாடும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் முக்கியமானதெனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.