அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து நெருக்கடிகளில் இருந்தும் அரசாங்கத்தை பாதுகாப்பதுடன் செளபாக்கிய திட்டத்தின் பிரகாரம் நாட்டை முன்னுக்குகொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்போம். அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராக வரக்குகூடிய சவால்களை வெற்றிகொள்வோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பேராளர் மாநாடு நேற்று முன்தினம் மாலை மாலபே சமூக கல்வி மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டுவருகின்றது. குறிப்பாக டொலர் பிரச்சினையால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. 

அதேபோன்று பணவீக்கம் அதிகரிக்கும்பாேது பொருட்களின் விலையும் அதிகரிக்கின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் மிகவும் கஷ்டத்துடன் வாழ்க்கையை கொண்டுசெல்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் இந்த அரசாங்கத்தை நாங்கள்தான் கொண்டுவந்தோம். அதனால் அரசாங்கத்தை பாதுகாப்பது எமது கடமை.  மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம், செளபாக்கிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்வதே எமது நோக்கம். 

இருந்தபோதும் சில கட்டங்களில் அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் வாக்குறுதிக்கு மாற்றமாக இடம்பெறும்போது அதனை சரிசெய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றாேம். 

குறிப்பாக துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தபோது அதற்கு எதிராக நாங்கள் அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே போராடி இதனை பாதுகாத்தோம். 

அதேபான்று 20 ஆவது திருத்தம் கொண்டுவந்தபோது அதில் இருந்து ஆராேக்கியமற்ற விடயங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தேம்.

மேலும்  எதிர்காலத்தில் அரசாங்கம் நாட்டுக்கு பொருத்தமில்லாத தீர்மானங்களை எடுக்கும்போது அதற்கு எதிராக நாங்கள் செயற்பட்டு அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்போம். அதற்காக நாங்கள் அமைத்த அரசாங்கத்தை நெருக்கடிக்கு ஆளாக்க இடமளிக்க விடமாட்டோம். அரசாங்கத்துக்கு எதிராக உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் வரக்கூடிய நெருக்கடிகளை நாங்கள் தோற்கடிப்போம் என்றார்.