ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 2 ரூபாவினால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு மற்றும் பேருந்து சங்கங்கள் என்பன இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய 14 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 16 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பேருந்து சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு முன்வைத்த பரிந்துரையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 3 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதேவேளை ஏனைய கட்டணங்களை 15 சதவீதத்தினால் அதிகரிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த கட்டணத்தை 7.5 முதல் 10 சதவீதம் வரையில் அதிகரிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை நாளை மறுதினம் அறிவிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.