இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17) கண்காணித்தார்.மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்தார். 

அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார். இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர். 

கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றில் ஏறினர். 17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர். 

சுமார் 20 நிமிடங்களாக இராமர் பாலத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட் இராஜதந்திரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவரிடம் இந்த பயணம் தொடர்பில்  ஊடகவியலாளர் வினவியபோது, “இதுவே முடிவு மாத்திரமல்ல, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார். 

தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் பாரத மக்களால் போற்றப்படுகின்றது.

இந்த 16 மணல் திட்டுக்களில் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் எஞ்சிய 8 இந்தியாவிற்கும் உரியவையாகும்