பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள் மத்தியில் எழுந்துள்ள அரசுக்கு எதிரான கடும்போக்கு நிலைமையானது ஆட்சிக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எரிபொருளையும், உணவு பொருட்களையும் கடனுக்கு கொள்வனவு செய்ய இந்தியாவுடனான ஒப்பந்தத்தை துரிதமாக முன்னெடுத்து தீர்வு காணுமாறு ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு தற்போதுள்ளது. அவ்வாறில்லையெனில் மாற்றுதிட்டத்தையேனும் வெளியிட வேண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரல் ஆகும் போது உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

நாட்டில் காணப்படும் டொலர் நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்வைத்து நேற்று செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் டொலர் நெருக்கடி தீவிர நிலைமையை அடைந்துள்ளது. அந்த சுமையை மக்கள் மீது சுமத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரம் என்பன சரிவடைந்து வருகின்றன. அடுத்த பிரச்சினையாக தொழிலின்மை ஏற்பட போகின்றது.

நடுத்தர பொருளாதார நிலையிலுள்ள மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பிரச்சினைகளுக்கு துரித தீர்வை வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது.

கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளன. நாமும் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

எனவே சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அவ்வாறில்லையெனில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மாற்றுதிட்டத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும்.

மேலும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்பது சகல எதிர்வுகூறல்கள் மூலமும் தெளிவாகிறது. பெரும்பாலான பிரதேசங்களில் கடந்த போகத்தை விட இம்முறை விளைச்சல் 60 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. இவ்வாறான நிலைமைகளினால் சினம் கொண்டுள்ள மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கடும்போக்கு நிலை ஏற்படும்.

அந்த கடும்போக்கு நிலைமையானது அரசாங்கத்திற்கும் நாளுமன்றத்திற்கும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில் மக்கள் எதிர்வலைகளை கவனத்தில் கொள்வதும் அவசியமாகும்.

எரிபொருளையும், உணவையும் கடனுக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. அந்த பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று இந்தியாவுடனான ஒப்பந்தத்தையும் விரைவில் மேற்கொள்ள வேண்டும். கடன் பெறுவதன் மூலமோ, கடனுக்கு பொருட்களை பெறுவதன் மூலமோ அந்நிய செலாவணி இருப்பின் பிரச்சனைக்கு தீர்வு கிட்டாது.

எனினும் தற்காலிக நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவேனும் கடனுக்கு எரிபொருளையும், உணவு பொருட்களையும் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை செயற்படுத்த இந்தியாவுடனான ஒப்பந்தங்களை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.