இலங்கையின் மீது தேவையற்ற வகையில் ஆதிக்கம் செலுத்த எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான எழுத்து மூலமான வரைவினை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு சமூகத்திற்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க உரிமை உள்ளது என்றும் போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை, அதை அரசாங்கம் மதிக்கிறது என கூறினார்.

அத்தோடு இலங்கை ஒரு சர்வாதிகார நாடு அல்ல என தெரிவித்த அவர் இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட நாடு என்பதனால் வேறு நாடுகளினால் இங்கு ஆதிக்கம் செலுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் என்பதோடு பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் ஆரோக்கியமான உறவு காணப்படுவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.