இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மயிலிட்டித் துறைமுகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், புதிதாக தெரிவு செய்யப்பட்ட கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு தரித்து விடப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகளையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்களின் கடல் வளங்களை அழிப்பதுடன் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

இதன்காரணமாகவே, அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகி்றன.

இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்புக்கள் என்னுடன் தாடர்பு கொண்டுள்ளன. கொழும்பு திரும்பிய பின்னர் கலந்துரையாடுவதற்கு சம்மதம் தெரித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

அதேவேளை, விடுவிக்கப்படாத மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி கிழக்கு, மயிலிட்டி தெற்கு, தையிட்டி தெற்கு, பலாலி, மற்றும் வளலாய் போன்ற இடங்களை விடுவித்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை வைத்த நிரையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், எதிர்வரும் தை மாதம் தொடக்கம் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.