உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடரபாக அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் விரிவான முயற்சிகளை எனது நிர்வாகம் ஒருங்கிணைத்து வருகிறது.

அந்த நடவடிக்கையானது ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மிக கடினமான ஒன்றாக அமையும்’ என கூறினார்.

எனினும், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என பைடன் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ‘ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க திட்டமிடுகிறது; அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் நாங்களும் எதிர்வினை ஆற்றுவோம்’ என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் பைடனும் புடினும் உக்ரைன் விவகாரம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கூறப்படும் நிலையில் பைடனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை பலப்படுத்தியுள்ளதாகவும் ரஷ்யா 90,000 படைகளை குவித்து வைத்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.

உக்ரைனுடனான அதன் எல்லைகளுக்கு அருகே ரஷ்யா படைகளை குவிப்பது இந்த ஆண்டு இரண்டாவது முறையாகும். எனினும், உக்ரைன் மீதான தாக்குதலுக்குத் தயாராகி வருவதை மாஸ்கோ மறுத்துள்ளது.