ஒமிக்ரோன் வைரஸைக் கண்டறிய தமிழகத்தில் 12 அரச ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரஸான ‘ஒமிக்ரோன்’ தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உள்ளது.

இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது.

இதனால் உலக நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருகின்றன.

இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆபிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம, இஸ்ரேல், ஹொங்காங்குக்கு பரவியுள்ளது.

புதிதாகப் பரவி வரும் வீரிய கொரோனா ரகமான ஒமிக்ரோன், ஏற்கனவே கொரோனா பாதிப்பில் விழுந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பரவி வருகிறது.

தென்னாபிரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதியாகும் முன்னரே, அவை பல்வேறு நாடுகளுக்குப் பரவியிருப்பதை இது காட்டுகிறது.

இந்நிலையில் ஒமிக்ரோன், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கமைய 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாபிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள், கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும், இருந்தாலும், தமிழகம் வந்திறங்கிய பிறகு இவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது,

அதில், தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டாலும் கூட ஏழு நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரோன் வைரசைக் கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் ஸ்ரான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய அரசு ஆய்வகங்களில் தொற்று கண்டறியும் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வகங்களில் டேக்பாத் என்ற கிட் மூலம் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.