ஒமிக்ரோன் கோவிட் வைரஸ் மீதான பயம் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் மாறுபாடு இந்தியா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்த சுஷில் சிங்  (வயது 55) என்பவர் தனது மனைவி சந்திரபிரபா (வயது 50), மகன் ஷிகார் சிங் (வயது 21), மகள் குஷி சிங் (வயது 16) ஆகியோரை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

கொலை செய்து தப்பியோடுவதற்கு முன்பு, இது குறித்து தனது சகோதரருக்கு பேராசிரியர் குறுந்தகவல் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளதாகவும்,அதில் ‘ஒமிக்ரோன் மாறுபாட்டில் இருந்து யாரும் காப்பாற்றப்படமாட்டார்கள்’. எனவே அனைவரையும் விடுவிக்கின்றேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சகோதரரின் பூட்டி இருந்த வீட்டை உடைத்து திறந்து பார்த்த போது தனது சகோதரரின் மனைவி மற்றும் குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரின் வீட்டிலிருந்து டைரியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.அதில், தனது குடும்பத்தினரை கொலை செய்தது குறித்தும், ஒமிக்ரோன் மாறுபாட்டைப் பற்றியும் அவர் எழுதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘இப்போது, ​​​​இறந்த உடல்களை எண்ணுவது தேவையில்லை’ என்றும், ​​​​கொரோனா வைரஸ் அனைவரையும் கொல்லும்’ என்றும் அவர் எழுதி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.