பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய திட்டங்களை முன்னெடுக்காமலிருப்பது கவலைக்குரியது. ஒருவேளை உணவை கூட பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலைக்கு  மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். குளிர் அறையில் இருந்துக் கொண்டு எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் நடைமுறைக்கு பொருத்தமானதாக அமையாது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தாக்கத்தினாலும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினாலும் பொது மக்கள் பெரும் பாதிப்பினை எதிர்க்கொண்டுள்ளார்கள். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அமையவில்லை.

செல்வந்த தரப்பினரிடமிருந்து வரி அறவிடலை அதிகரித்து அதனூடாக நடுத்தர மக்களுக்கு  கூப்பன் முறையின் பிரகாரம் நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தோம். எமது ஆலோசனைகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படவில்லை.

பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய திட்டங்களை இதுவரை முன்னெடுக்காமலிருப்பது கவலைக்குரியது. பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் பெரும்பாலானோர் ஒரு வேளை உணவை கூட பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆடம்பரமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை சற்று தாமதப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பிரதமரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். இருப்பினும் எமது யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை.

அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் நெருக்கடிகளை தற்போது எதிர்க்கொள்கிறார்கள். பிள்ளைகளுக்கு சத்துணவு கிடைக்கப் பெறுவதில்லை. 5 பிள்ளைகளில் ஒரு பிள்ளை போசாக்கு குறைப்பாட்டினால் பாதிப்படைந்துள்ளது. இக்காலப்பகுதியில் மாத்திரம் போசாக்கு குறைப்பாட்டு 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குளிர் அறையில் இருந்துக் கொண்டு முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக அமையும். அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் விளைவை நடுத்தர மக்கள் தற்போது எதிர்க்கொண்டுள்ளார்கள் என்றார்.