நாட்டில் நிலவும் உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை  உற்பத்திகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது அரசி மற்றும் மரக்கறிகளின் சந்தை விலைகளில் மிகையான அதிகரிப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளது. 

அதன்படி கடந்த 12 மாதங்களில் மரக்கறிகளின் விலைகளைப் பொறுத்தமட்டில் போஞ்சி 225 ரூபாவாலும் கரட் 205 ரூபாவாலும் தக்காளி 82 ரூபாவாலும் கத்தரி 177 ரூபாவாலும் புடலங்காய் 112 ரூபாவாலும் பச்சைமிளகாய் 580 ரூபாவாலும் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 82 ரூபாவாலும் உயர்வடைந்துள்ளன.

அரசாங்கத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, நாட்டின் தேசிய உணவு உற்பத்திக்கு அவசியமான உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்நாட்டிலேயே சேதன உரத்தைத் தயாரிக்கப்போவதாக அரசாங்கம் கூறியபோதிலும், அதற்குரிய முறையான செயற்திட்டங்கள் எவையும் வகுக்கப்படவில்லை.

நாடளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் உரப்பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் தற்போதுவரை உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாததன் விளைவாக விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிப்படைந்திருக்கின்றன. 

அதன் காரணமாக நாட்டின் தேசிய உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதுடன் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ளன.

அதன்படி புறக்கோட்டை மற்றும் தம்புள்ளை சந்தைகளில் கடந்த 2021 ஜனவரி முதலாம் திகதியிலும் 2021 டிசம்பர் 31 ஆம் திகதியிலும் அரிசி மற்றும் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள விலைகளை எடுத்துநோக்குமிடத்து 12 மாதங்களில் அவற்றின் விலைகளில் மிகையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்கமுடிகின்றது.

குறிப்பாக தம்புள்ளை சந்தையில் மரக்கறிகளின் சில்லறை விலைகளைப் பொறுத்தமட்டில் கடந்த 2021 ஜனவரி முதலாம் திகதி ஒரு கிலோகிராம் போஞ்சி, கரட், தக்காளி, கத்தரி, புடலங்காய், பச்சைமிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு ஆகியவற்றின் விலைகள் முறையே 115 ரூபா, 160 ரூபா, 98 ரூபா, 58 ரூபா, 123 ரூபா, 345 ரூபா, 98 ரூபா, 228 ரூபாவாகக் காணப்பட்ட போதிலும், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி (நேற்று முன்தினம்) அவற்றின் விலைகள் முறையே 340 ரூபா, 365 ரூபா, 180 ரூபா, 235 ரூபா, 235 ரூபா, 925 ரூபா, 180 ரூபா, 230 ரூபாவாக அதிகரித்துள்ளன.

அதன்படி 12 மாதங்களில் மேற்படி மரக்கறிகளின் விலைகளில் போஞ்சி 225 ரூபாவாலும் கரட் 205 ரூபாவாலும் தக்காளி 82 ரூபாவாலும் கத்தரி 177 ரூபாவாலும் புடலங்காய் 112 ரூபாவாலும் பச்சைமிளகாய் 580 ரூபாவாலும் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 82 ரூபாவாலும் உருளைக்கிழக்கு 2 ரூபாவாலும் உயர்வடைந்துள்ளன.

அதேபோன்று புறக்கோட்டை சந்தையில் அரிசி வகைகளின் மொத்த விலைகளைப் பொறுத்தமட்டில் கடந்த 2021 ஜனவரி முதலாம் திகதி 130 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை டிசம்பர் 31 ஆம் திகதி 150 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேவேளை கடந்த 2021 ஜனவரி முதலாம் திகதி ஒரு கிலோகிராம் நாட்டரிசி, வெள்ளை அரிசி மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் முறையே 106 ரூபா, 99 ரூபா, 96 ரூபாவாகப் பதிவாகியிருக்கும் நிலையில் டிசம்பர் 31 இல் அவற்றின் விலைகள் முறையே 137 ரூபா, 134 ரூபா, 120 ரூபாவாக அதிகரித்துள்ளன.

அதன்படி 12 மாதங்களில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசின் விலை 20 ரூபாவாலும் நாட்டரிசியின் விலை 31 ரூபாவாலும் வெள்ளை அரிசியின் விலை 35 ரூபாவாலும் சிவப்பு அரிசியின் விலை 24 ரூபாவாலும் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.