நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய நிலப்பரப்புகளை  நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.  

அத்துடன் இதே நிலைமை தொடருமாயின் கடன் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள நிலப்பரப்புகளை வழங்க வேண்டிய நிலையே ஏற்படும்.

நாட்டில் தற்போது காணப்படும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச தொடர்புகள் உள்ள ஒருவரால் மாத்திரமே முடியும். 

இலங்கையில் அவ்வாறு சர்வதேச தொடர்புகள் காணப்படும் ஒரேயொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே ஆவார்.

எனவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிகொத்தாவில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2015 இல் நாம் ஆட்சியைக் கைப்பற்றிய போது எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. நாம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்கும் போது பெற்றோர் லீற்றரின் விலை 132 ரூபாவாகக் காணப்பட்டது. எனினும் தற்போது 177 ரூபா வரை அதிகரித்துள்ளது.

அன்று எமது எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்தவர்களே இன்று அதனை பாராட்டுகின்றனர். எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று பெற்றோல் விலை 130 – 140 ரூபாவாகவே காணப்பட்டிருக்கும். 

கொவிட் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்தது.

எனினும் அந்த சலுகையை மக்களுக்கு வழங்காத அரசாங்கம் , நிதியமொன்றை நிறுவி அதன் மூலம் கிடைக்கப்பெறும் இலாபத்தை உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது வழங்குவதாக குறிப்பிட்டது. எனினும் அந்த நிதியத்திற்கும் , அதனால் கிடைக்கப் பெற்ற இலாபத்திற்கும் என்னவானது என்பது இது வரையில் அறிவிக்கப்படவில்லை.

2001 இல் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ரணில் விக்கிரமசிங்கவே மீள கட்டியெழுப்பினார். அவர் அதனை செயலால் நிரூபித்த தலைவராவார். அவரது தலைமையில் உருவாகக் கூடிய அரசாங்கத்திற்கு மாத்திரமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.