திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு இரண்டு சிறுவர்களினதும் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்று (03) இரவு 10.40 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடியுள்ளனர். இதில் இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது உயிர் தப்பிய மற்றைய இரண்டு சிறுவர்கள் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில் தேடியபோது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

நேற்று (03) மாலை வேளையில் இவ் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தரம் 09 இல் கல்வி கற்கும் யோகேந்திர ராசா லக்சன் வயது (14), தரம் 06 இல் கல்வி கற்கும் டினேஸ்காந்த் நிம்ரோசன் வயது (12) ஆகிய மாணவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்களையும் நேற்றிரவு (03) ஈச்சிலம்பற்று பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் பார்வையிட்டதோடு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். தற்போது இரண்டு சிறுவர்களினதும் சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்