சென்னை தீவுத்திடலில் கணவரை கொலை செய்ய கூலிப்படையை அனுப்பிய வழக்கில், பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை தீவுத்திடல் அருகே அன்னை சத்யா நகரை சோ்ந்தவா் அக்பா் பாஷா. வியாபாரியான இவரும், அந்தப் பகுதியைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி நாகவல்லி (எ) யாஸ்மின் பானுவும் காதலித்து 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா்.

இதனிடையே, நாகவல்லிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ரியாஸ் என்பவருக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டது. இதையறிந்த அக்பா்பாஷா, தனது மனைவி நாகவல்லியை கண்டித்தாா். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் விளைவாக நாகவல்லி, தனது கணவா் அக்பா் பாஷாவை கொலை செய்ய கூலிப்படையை ஏவினாா். அக்பா் பாஷா, முத்துசாமி பாலம் அருகே வியாழக்கிழமை இரவு நடந்து செல்லும்போது, அங்கு வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.

இதில் பலத்த காயமடைந்த அக்பா் பாஷா, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனா். அதில், நாகவல்லி அதே பகுதியைச் சோ்ந்த தாரணி மூலம் கூலிப்படையைக் கொண்டு அக்பா் பாஷாவை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதை அடுத்து பொலிஸாா், நாகவல்லியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த தாரணி, வியாசா்பாடியைச் சோ்ந்த அரவிந்தன், சரவணன் ஆகிய 3 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். வழக்கில் மேலும் சிலரை பொலிஸாா் தேடி வருகின்றனா்