எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சமாக பேருந்துக் கட்டணத்தை 25 ரூபாயாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ள அச்சங்கம், இதற்கான கலந்துரையாடலை நடத்த இன்று பிற்பகல் கூடவுள்ளனர்.

அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் நாடு எதிர்கொண்ட நிலைமையை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

கட்டணத்தை அதிகரிக்காமல் துறையை மேம்படுத்த பல முன்மொழிவுகளை அவர்கள் சமர்ப்பித்ததாகவும், துரதிஷ்டவசமாக அந்த முன்மொழிவுகளை செயற்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

உதிரி பாகங்கள் உள்ளிட்டவையின் விலை அதிகரித்துள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்பதால், தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.

மேலும் பேருந்து கட்டண அதிகரிப்பு என்பது வெறும் மாற்று யோசனையே என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்