பலருக்கு பிடித்த இனிப்புக் குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி – 200 கிராம்
  2. புழுங்கல் அரிசி – 200 கிராம்
  3. உளுந்தம்பருப்பு – 1 மேஜைக்கரண்டி
  4. வெந்தயம் – ½ மேஜைக்கண்டி
  5. கருப்பட்டி – 200 கிராம்
  6. ஏலக்காய் – 2 அல்லது 3 எண்ணம்
  7. நல்ல எண்ணெய் – சிறிதளவு   

செய்முறை

முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் அதனை கிரைண்டரில் இட்டு இட்லி மாவு பதத்தில் ஆட்டிக் கொள்ளவும்.

பின் அதனை சுமார் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும்.  

கருப்பட்டியை தூளாக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அடிக் கனமான பாத்திரத்தில் தூளாக்கி வைத்துள்ள கருப்பட்டியைப் போட்டு சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் சிறு தீயில் வைக்கவும். கருப்பட்டி முழுவதும் கரைந்து கரைசலானதும் அடுப்பில் இருந்து இறக்கவும். பின் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய கருப்பட்டிக் கரைசலை ஆட்டிப் புளிக்க வைத்துள்ள மாவில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் ஏலக்காயைத் தூளைச் சேர்க்கவும். பணியாரத்திற்கு மாவு தயார்.

அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சூடேறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும். பின் குழியின் முக்கால் பாகத்திற்கு மாவினை ஊற்றவும்.    

மாவானது ஓரங்களில் வெந்தவுடன் குச்சியைக் கொண்டு திருப்பிப் போடவும். பின்புறமும் வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து விடவும். சுவையான குழிப்பணியாரம் தயார்.

இதனை குழந்தைகள் விரும்பி உண்பர். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தின்பண்டமாகவும் இதனைக் கொடுத்து விடலாம்