ஹிட்லர் காலத்தில் ஹைட்ரா என்று ஒரு சூப்பர் வில்லன் உருவாகிறான். அவனை கேப்டன் அமெரிக்கா எப்படி அழிக்கிறான் என்பதே கதை. முதலில் கேப்டன் அமெரிக்கா எப்படி உருவாகிறான்? என்பது முதல் பாதி. பின்னர் கேப்டன் அமெரிக்கா எப்படி சூப்பர் ஹீரோவாகிறான் என்பது இரண்டாம் பாதி. இன்னும் எத்தனை காலத்துக்கு ஹிட்லர் படையையே எதிரியாக காமித்து கொண்டிருப்பது? அவனை மாதிரியே புதிதாக ஒரு வித்தியாசத்தை எதிரியாக உருவாக்கலாம். அவனையே சூப்பர் வில்லனாக உருவாக்கலாம் என்பது தான் திரைக்கதை எழுதிய க்ரிஸ்டப்பர் மார்கஸ் நோக்கமாக இருக்கமுடியும்.

ஒருக்காட்சி தமிழ்ப்படத்தை ஞாபகப்படுத்தியது. எதுவென்று உங்களால் கணிக்க முடிகிறதா? எனக்கு எப்போதும் நினைவில் இருக்கப்போகிற காட்சியாக இருக்கப்போகிறது. மொத்த கேப்டன் அமெரிக்கா முதல் அவெஞ்சர் படத்திலேயே அந்தகாட்சி மட்டும் தான் தமிழ் அம்சத்தோடு இருந்தது. அது ஆச்சரியம் தான். மேற்கத்திய கலாச்சாரத்தில் எப்படி ஒரு தமிழ் உணர்வு வந்தது என்று. இன்னுமா உங்களால் ஊகிக்க முடியவில்லை. அதாவது தமிழ் தன்மை மேற்கத்திய தன்மை என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாமே மாற்றத்திற்குரியது தான். ஆனால் பொதுவாக ஆங்கில படங்களில் அந்த குறிப்பிட்ட காட்சியில் வருவதுபோலொரு உணர்வு வந்ததே இல்லை ஆனால் நிறைய தமிழ்படங்களில் அந்த காட்சியில் காட்ப்பட்ட உணர்வை கொட்டியிருப்பார்கள். கமலின் அபூர்வ சகோதரர்கள் படம் ஒரு உதாரணம். கமலின் கையில் இருந்து மோதிரம் மாத்தும் காட்சி உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா என்ன? அட இன்னுமா கேப்டன் அமெரிக்காவின் காட்சி உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை? நீங்களெல்லாம் என்ன மார்வெல் ரசிகன்? தயவு செய்து என்னிடம் இனிமேல் மார்வெல் ரசிகன் என்று மார்தட்டி கொள்ளாதீர்கள்! அந்த காட்சி…

கேப்டன் அமெரிக்கா ஒல்லியாக இருந்தபோது மிலிட்டரி தேர்விசெய்யும் அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு முகமில்லா ராணுவ க்ரூப் போட்டோ புகைப்படத்தில் கேப்டன் அமெரிக்கா தன்னுடைய முகம் வைக்கக்கூட தனக்கு உயரம் போதவில்லையே என உருகும் காட்சி. இதயம் இருக்கும் எவருக்கும் நெஞ்சில் ஈரம் ஊரும் காட்சியது இல்லையா? எப்படித்தான் அதை மறந்தீர்களோ தெரியவில்லை? இனிமேல் தயவு செய்து கவனமாக மார்வெல் ரசிகனாக மார்வெல் படங்களை பாருங்கள். எதையும் மிஸ் செய்து விடாதீர்கள். அதுபோலொரு காட்சியை தமிழ் அம்சத்துடன் இருந்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. மொத்த உலகமும் ஒரேபோன்ற மனிதர்கள் தான் அவர்களின் ஒற்றுமையான மனித உணர்வை கலாச்சாரங்கள் தான் வேலிபோட்டு பிரிக்கின்றன என்பதை அப்போது உணர்ந்தேன்.

திரைக்கதைப்படி பார்த்தால் படம் முதல் ஒரு மணிநேரத்திலேயே முடிந்துவிட்டது ஆனால் வேண்டுமென்றே 2 மணிநேரம் இழுத்தடித்து விட்டான் இயக்குனர் ஜோ ஜான்சன் என்பவன். படத்தில் மொத்தம் அறுபது காட்சிகள் என்றால் அதில் இருபதாயிரம் ஸ்டண்ட் காட்சிகள் வைத்து தலைவலி வரவைத்துவிட்டான். இரண்டாம் உலகப்போர் பற்றிய வரலாறெல்லாம் ரத்தத்தில் ஊரியவன் மட்டும்தான் கேப்டன் அமெரிக்கா போன்ற படங்களை எல்லாம் திறம்பட எடுக்கமுடியும். புதிதாக வந்துவிட்டு படம் இயக்குவதற்காக பணியில் அமர்த்தப்பட்ட இயக்குனர்கள் எல்லாம் மகாசோனகிரி சொக்கா மாதிரி தான் இயக்குவார்கள். அப்படியொரு வடை தான் கேப்டன் அமெரிக்கா முதல் அவெஞ்சர். படமுழுக்க சண்டை காட்சிகள் இருந்தாலும் அதில் சத்தம் மட்டுமே இருக்கிறது தவிர யுத்தம் இல்லை. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லரே கொடூர சூப்பர் வில்லனாக இருந்தால் அவனிடம் இருந்து எப்படி அமெரிக்காகவை காப்பாற்றுவதன் மூலம் உலகை காப்பாற்ற முடியும் என்பதே படத்தின் ஒன்லைன் ஆனால் அதை சப்பையான ஏனோதானோ கொரியோ சண்டை காட்சிகள் மூலம் கழுத்தருந்தது தான் மிச்சம். இதையா அவெஞ்சர்ஸ் என்று உலகம் கொண்டாடியது என்று தோன்றியது ஒரு கணம்.

படத்தின் இயக்குனர் ஜோ ஜான்ஸ்டன் ஜும்மாஞ்சி படத்தையும் ஜூராசிக் உலகம் 3 படத்தையும் இயக்கியவர். ஜூராசிக் பார்க் முதல் ரெண்டு பாகங்கள் எனக்கு பிடித்தது ஆனால் பிடிக்காதது 3ஆவது பாகம் தான். ஹாலிவுட்டில் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. பயங்கர பிரமாண்டமான செலவுசெய்து பக்கா கமர்ஷியலாக ஒரு படத்தை எடுப்பார்கள். அப்பறம் தனது கலை திறமையை வெளிப்படுத்த ஒரு கலைப்படம் எடுப்பார்கள். அதில் தப்பித்த ஹாலிவுட் கமர்ஷியல் மேதாவிகளும் இருக்கிறார்கள். ரோலாண்டு எமரிச் மற்றும் மைக்கேல் பேவே அவர்கள். ஜோ ஜான்ஸ்டன் என்ற இந்த இயக்குனர் அப்படி கலைப்படம் எடுத்திருக்கிறார், ஓநாய் மனிதன் என்ற 1941 ரீமேக் படமும் ஒக்ட்டோபார் ஸ்கை என்ற படமும் தான் அது. அந்த ரெண்டு படத்தில் ஏதாவது ஒரு படத்தையாவது பார்த்துவிட்டு அதிலிருக்கும் கலையம்சம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

திரைக்கதை க்ரிஸ்டப்பர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்பீலி என்பவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் தான் தார் டார்க் உலகம் படத்தையும் நார்னியா படத்தையும் எழுதியிருக்கிறார்கள். அந்த ரெண்டு படங்களையும் எனக்கு பெரிதாக பிடிக்காது. தார் ரக்நராக் தரமான பீஸ். தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தை அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் தான் இயக்குகிறார்கள். ரஸ்ஸோ சகோதரர்கள். அதற்கும் க்ரிஸ்டப்பர் மார்க்ஸ் தான் திரைக்கதை. அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்திற்கு எழுதியவர்களும் இவர்களே.

எடுடா அந்த சூரிய மேளம்
Captain america first avenger

விமர்சனம் எழுதியது,
ஹகுணா மட்டாட்டா