தலை மன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (20) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று (19) மதியம் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் இன்று (20) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் உத்தரவிட்டார்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மேற்படி கைது செய்யப்பட்டு மன்னார் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
12 மீனவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.