சமையல் எரிவாயு பிரச்சினை தொடர்பில் எரிவாயு நிறுவன தலைவர்களும்  அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். அதனை விடுத்து அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் நிறுவனத்தலைவர்கள் செயற்படக் கூடாது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பு- ஹொரன வீதியில் வெரஹர பால நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்ற போது ஊடகங்கங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.

இதன்போது மேலும் கூறிய அவர்,

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டு வந்தது தவறு என எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி நிலையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது தவறு என்று கூறுகின்றனர். அவர்கள் கூறுவதைப் போன்று நாட்டில் என்ன அரசியல் நெருக்கடி நிலை உள்ளது?

நாடாளுமன்றம் ஜனவரி 11 ஆம் திகதி கூட இருந்தது. அதனை விட மேலும் 6 நாட்கள் காத்திருக்க முடியாதா? கொவிட் காலத்தில் ஒத்துழைப்பு வழங்காத உலகில் ஒரே ஒரு எதிர்க்கட்சி எமது நாட்டிலே உள்ளது. நாடாளுமன்றம் கூடிய பின்னர் இவர்கள் எமக்கு ஆலோசனை தருவார்களா? நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவது புதிய விடயமல்ல. 

நாட்டில் டொலர் நெருக்கடி காணப்படுகிறது. அதற்காக மக்களை அசௌகரியத்தில் தள்ள மாட்டோம் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம் என்றார்.