ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக இருந்தபோது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

அதனை முன்னிறுத்தி அமெரிக்காவைப்போன்று அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மான் அந்நாட்டு வெளிவிவகாரச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரித்தானியா ‘மெக்னிற்ஸ்கி’ முறையிலான தடையை விதிக்கவேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகாரச்செயலாளரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மெக்னிற்ஸ்கி சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிராகத் தடைவிதிக்கமுடியும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்கமுடியும்.

அதன்படி ஏற்கனவே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாரா ஜோன்ஸ், எலியற் கெல்பேர்ன் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகிய மூவரும் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

 

இந்நிலையில் நான்காவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மானும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைக்கோரிக்கையை முன்வைத்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

அக்காணொளியின் ஊடாக அவர் மேலும் கூறியிருப்பதாவது, பிரித்தானியாவின் சர்வதேச தடை வழிகாட்டல்களுக்கு அமைவாக இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியுள்ளது.

இலங்கையில் 2009ம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ‘யுத்த சூனிய வலயங்களில்’ ஷெல் தாக்குதல்களை நடாத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக ஜெனரல் சவேந்திர சில்வா செயற்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இறுதிக்கட்டப்போரின்போது பல நூற்றுக்கணக்கானோர் படையினரிடம் சரணடைந்தபோது அந்த இடத்தில் சவேந்திர சில்வாவும் இருந்ததை உறுதிப்படுத்திய கண்கண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சமர்ப்பித்துள்ளது. அவர்களில் பலர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக பலவருடங்களாக அவர்களின் புகைப்படங்களுடன் வீதிகளில் இறங்கிப்போராடிவருகின்றார்கள்.

இருப்பினும் அதற்குவரை அந்தக் கேள்விக்குரிய பதில் கிட்டவில்லை. போரின்போது சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படைப்பிரிவினால் நிகழ்த்தப்பட்ட சட்டவிரோதமான படுகொலைகள் உள்ளடங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் நோக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பயணத்தடை விதித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நாம் அவருக்கெதிராகத் தடைவிதிக்கவேண்டிய தருணம் இதுவாகும். அவர் பிரித்தானியாவிற்குள் நுழைவதை அனுமதிக்கக்கூடாது.

சவேந்திர சில்வா 58வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக இருந்தபோது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அதன்போது அவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் பொறுப்புக்கூறலுக்குட்படுத்தப்படவேண்டும் என்று பிளக்மான் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது