சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார்.

ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்கு செய்வதற்குத் தடை விதிக்கும் ‘உய்கர் கட்டாயத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்ட’ சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

அந்த மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் கட்டாய உழைப்பு இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டவை என தொழிலகங்கள் உறுதிப்படுத்தும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று அந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டமூலத்துக்கு தற்போது ஜனாதிபதி ஜே பைடனின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், அது தற்போது அமுலுக்கு வருகிறது.

சீனாவின் சிறுபான்மை இனத்தவர்களான உய்கர் முஸ்லிம்கள், அந்த நாட்டின் ஸின்ஜியாங் மாகாணத்தில் பெருமளவில் வசித்து வருகின்றனர். அந்த இனத்தைச் சேர்ந்த அமைப்புகள் சீனாவிடமிருந்து பிரிவினை கோரி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது. பிரிவினைவாதம் தலையெடுப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக உய்கர் இன மக்கள் மீது சீனா அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கட்டாய கருக்கலைப்பு மற்றும் கருத்தடை போன்ற வழிமுறைகள் மூலம் உய்கர் மக்களுக்கு எதிரான இன அழிப்பில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.

இது தவிர, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ‘மறு கல்வி’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான உய்கர் இனத்தவர்களை தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசாங்கம் கொடுமைப்படுத்துவதாக அந்த மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன.

அந்த முகாம்களில் உய்கர் இனத்தவர்களை சீன அரசாங்கம் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தி பொருள்களைத் தயாரிப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.