சீமெந்து மற்றும் எரிபொருள் பரிமாற்று நடவடிக்கைளிலிருந்தும் இன்று (27) முதல் விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டுக்களை விநியோகித்தல் முதலான செயற்பாடுகளில் இருந்து விலகித் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தொழிற்சங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருடன் இன்று (27) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தமையினால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க அத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தொடருந்து சமிக்ஞை முறைமையில் நிலவும் குறைபாடுகள் திருத்தப்படல் மற்றும் தொடருந்து பயண கால அட்டவணையை மீளமைத்தல் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடருந்து அதிபர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய, சீமெந்து மற்றும் எரிபொருள் பரிமாற்று நடவடிக்கைகளிலிருந்தும் விலக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.