அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்லும் விதம் குறித்து சுதந்திர கட்சியினர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஆலோசனை வழங்க வேண்டிய தேவை கிடையாது. தேவையில்லாத பிரச்சினைகளை சுதந்திர கட்சியினர் தோற்றுவிக்கிறார்கள். அரசியல் ரீதியில் சுதந்திர கட்சி ஏதோ ஒரு திட்டத்தை வகுக்கிறது. அத்திட்டம் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சேதன பசளை திட்டத்திற்கு எதிராக கடந்த மாதங்களில் பல்வேறு தரப்பினரது அனுசரனையுடன் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது மரக்கறிகளின் விலை என்றும் இல்லாத வகையில் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. அதனால் நுகர்வோர் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டார்கள்.

மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டமை பின்னர் குறைவடைந்தமை திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்று குறிப்பிட வேண்டும். இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளன. இரசாயன உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் ஓரிரு நாட்களில் விளைச்சலை பெற்றுக் கொண்டார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டருடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்களை எதிர்தரப்பினர் குறுகிய அரசியல் பிரசாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஆராய முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வார காலத்திற்குள் உண்மை காரணி பகிரங்கப்படுத்தப்படும்.

அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள். அரச நிர்வாகத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்ல வேண்டும் என அவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்லும் விதம் தொடர்பில் சுதந்திர கட்சியினர் ஜனாதிபதி,பிரதமருக்கு ஆலோசனை வழங்க வேண்டிய தேவை கிடையாது.

சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் ஏதோவொரு திட்டத்தை வகுக்கிறது. அத்திட்டம் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.