சுவிட்சர்லாந்தில் நாட்டில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஒருவர் அதிகபடியான வாக்குகளைப் பெற்று அம் மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் புலம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்டத்தின் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாப்பிள்ளை கபிரியேல் என்பவர் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியீட்டிய இவர் இந்த வருடமும் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டியபோதும், கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இம்முறை அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற இத் தேர்தலில் இவரின் வெற்றிக்கு சுவிட்சர்லாந்து மக்களே அதிகபடியான வாக்குகளை அளித்து வெற்றிவாகை சூட வழி வகுத்துள்ள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தேர்தலில் 40 உறுப்பினர்கள் தெரிவுக்காக ஐந்து கட்சிகளிலிருந்து 72 பேர் போட்டியிட்டதாகவும் இதில் சமூக ஜனநாயக கட்சியைச் சார்ந்த 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெற்றிவாகை சூடிய மன்னார் மைந்தனுக்கு பல்லரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.