அனைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. நிறைவேற்று ஜனாதிபதியின் கைப்பாவைகளாகவே இருக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஆகவே, நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு மக்களிடம் உள்ள ஒரே மாற்று தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கே.டி.லால்காந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச சொத்துக்கள் அனைத்தையும் மீட்பதற்கு, ஆட்சி அதிகாரத்தை தம்மிடம் வழங்குமாறு பொதுமக்களிடம்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தற்போதைய நிர்வாகம், நாட்டை ஒரு மூலைக்கு கொண்டு சென்றுள்ளது, ஆகவே நடைமுறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, தற்போதைய அரசாங்கத்திடம் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது வீண் என கே.டி.லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை  நாடாளுமன்றம் கைப்பாவைகளினால் நிரம்பியுள்ளதுடன், அங்கு இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. அந்தவகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு பொருந்தாது  என அவர் குறிப்பிட்டுள்ளார்.