ட்விட்டர் இணை நிறுவுனர் ஜக் டோர்சி அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவரின் இடத்திற்கு தற்போது தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் இந்தியரான பராக் அக்ராவால் நியமிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் தெரிவித்தது.

2006இல் ட்விட்டரை இணைந்து நிறுவிய டோர்சி, ட்விட்டர் மற்றும் கட்டண நிறுவனமான ஸ்கொயரின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நீடித்தார்.

“நான் வெளியேறுவதற்கான இறுதி நேரம் இதுவாகும்” என்று குறிப்பிட்டிருக்கும் அவர், நிறுவனம் முன்னோக்கிச் செல்ல தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமது இடத்திற்கு வருபவர் பற்றி அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “அவரது திறமை, மனம் மற்றும் ஆன்மாவுக்காக நான் ஆழ்ந்த நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

அவர் தலைமை வகிப்பதற்கான நேரமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த அக்ராவால், 2017 தொடக்கம் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவராக இருந்து வருகிறார்.