பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் நபரொருவரை தாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இந்த சம்பவம் கேகாலை நகரத்தில் சுதந்திர வீதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பதோடு, சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மதுபோதையில் பெண்ணொருவரையும் இரும்பினால் தாக்கியுள்ளார். குறித்த நபரால் தாக்குதலுக்கு உள்ளான பெண் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான தாக்குதலுக்கு உள்ளான குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். 

அத்தோடு சிறைச்சாலைக்குள் கைதியொருவரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நபர் மதுபோதையில் முறையற்ற விதத்தில் செயற்பட்டுள்ளமையால் அவரை கைது செய்வதற்கு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

எனினும் சந்தேகநபர் அதற்கு இடமளிக்காது பொலிஸ் உத்தியோகத்தரை தாக்க முற்பட்டுள்ளார். இதன் போது சந்தேகநபரை கட்டுப்படுத்துவதற்காகவே தான் அவரை தாக்கியதாக பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் குறித்த சந்தேகநபர் அந்த நகரத்திலுள்ள கடையொன்றுக்கு வருகை தந்து அங்குள்ள பெண்ணை இரும்பால் தாக்கியுள்ளமை, அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி செயற்பட முடியாது. 

எனவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரினால் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.