ஆப்கானிஸ்தானில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்ற பயணங்களின் போது, அவர்களுடன் நெருங்கிய ஆண் உறவினர் இருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுடன் நெருங்கிய ஆண் உறவினர்கள் இல்லாமல் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு பயணத்திற்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட மாட்டாது என தலிபானின் நன்னடத்தை மற்றும் தீமை தடுப்பு அமைச்சகம வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

72 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் பெண்களுக்கு, இனி தங்கள் ஆண் உறவினர்கள் யாரும் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர, ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களை தங்கள் வாகனங்களில் அமர அனுமதிக்கக்கூடாது என்று வாகன உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தலிபானின் இந்த முடிவுக்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹிஜாப் விவகாரத்தில் தலிபானின் விளக்கம் தெளிவாக இல்லை என்று அவர்கள் வாதிடுக்கின்றனர்.

இவை அனைத்திற்கும் மேலாக, இசை மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தொடர்பாகவும் தலிபான் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இனி மக்கள் தங்கள் வாகனங்களில் இசையை ஒலிக்கச் செய்ய கூடாது என்று தலிபான் கூறியுள்ளது. முன்னதாக, தங்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பெண்கள் நடிக்கும் தொடர்களையும், நாடகங்களையும் காட்டுவதை நிறுத்துமாறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தவிர, ஹிஜாப் அணியாமல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை வழங்க முடியாது என்று செய்தி ஊடகத்தை சார்ந்த பெண் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது