கண்டி – குண்டசாலை பகுதியில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்களால், சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

51 வயதுடைய பெண் ஒருவரே சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

மாத்தளை – வில்கமுவ பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தமது பிள்ளையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்காக குண்டசாலை பகுதியில் உள்ள தற்காலிக வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கமோ, அதனுடன் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்த நிறுவனமோ எந்தவொரு ஆய்வினையும் இதுவரை நடத்தவில்லையென பெண்ணின் கணவர் கவலை வெளியிட்டார்.