கண்விழிக்கும் போதே
கலவரம் தொற்றிக்கொள்கிறது
விண்பிளக்கும் அதிர்வோடு
விலைகொடுத்த எரிவாயு
வெடிப்போடு விடியுமோவென்று.!

வெதுப்பகத்து பாண்மாவு
வேகமாகப் பொங்குவதுபோல்
வெதுப்பிப் பொருட்களெல்லாம்
வெருட்டுறதே கடைகளிலே.!

விண்மேகம் கண்கசக்கி
வீழும்நல்ல மழைநீரும்
மண்புகுதல் மறுத்ததினால்
மக்கள் வயல் மூழ்கிறதே.|

உரமில்லா விவசாயம்
மரக்கறிகள் மலைவிலையில்
தரமில்லா உணவுண்டு
தளர்ந்திடுமோ உடல்நலமும்.?

அசேதனங்கள் தவிர்த்தலென்று
ஆனவெரு திட்டமில்லா
சேதனத்தை விசங்கலந்து
சேர்த்திடுதல் உபாயமாமோ.?

இறந்தவரை நினைத்துருகி
இதயவலி குறைத்திடவும்
திறந்த நல்ல தீர்வுமில்லை
திசைகளெட்டும் அடக்குமுறை.!

அரசியலில் ஆணவங்கள்
சிரசுநிறை காழ்ப்புணர்வு
தரித்திரமாய் ஆகிறதே
தரணியதில் ஜனநாயகமும்.!

மதவெழுச்சி எனும்பெயரில்
மனிதமாண்பு சிதைகிறது
விதவிதமாய் பிரிவினைகள்
வீறுநடை போடுறதே.!

   ...சூரியநிலா...