சாதாரண அரச  பணியில் கூட ஈடுபட முடியாத ஒரு நபரை அமைச்சராக நியமிப்பதோ அல்லது பிரதமராக்குவதோ நாட்டின் சட்டத்திற்கு முரணானது. 

இதனை எதிர்த்தே பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைக்கவே முடியாது எனவும் அவர் கூறினார்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை தற்காலிக பிரதமராக நியமிக்கும் முயற்சிகள் அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்படுவதாக தெரிய வருகின்ற நிலையில், அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் சட்ட அங்கீகாரம் குறித்தும் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஆட்சி மாற்றம் அவசியமாக இருந்த வேளையில் இந்த ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையில் ஆட்சி மாற்றத்தை முன்னெடுத்தோம். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் மீது நம்பிக்கை வைத்தோம், அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். 

ஆனால் அதன் பின்னர் அவரும் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைக்கவே முடியாது.

பொருத்தமில்லாத அதிகாரிகளை பிரதான துறைகளில் நியமித்ததன் மூலமே நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டது. இதற்கு முன்னர் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட வேளையிலும் கூட நாட்டை கடன் பொறிக்குள் தள்ளவில்லை. யுத்த காலத்தில் கூட பாரிய கடன் நெருக்கடி இருக்கவில்லை. 

ஆனால் யுத்தத்திற்கு பின்னர் நாட்டை முழுமையாக கடன் பொறிக்குள் தள்ளிவிட்டனர். மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாடு கடன் பொறிக்குள் சிக்கியது என்பதே உண்மையாகும்.

பஷல் ராஜபக் ஷ இன்று நாட்டை நாசமாக்கி வருகின்றார். பஷில் ராஜபக்ஷவிற்கு  இந்த நாட்டில் சாதாரண அரச பணியாளராக கூட சேவைசெய்ய  முடியாது. அதற்கு இலங்கை சட்டத்தில் இடம் இல்லை. 

அரசியல் அமைப்பில் 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்கி 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்தவுடன் அனைத்தும் நிவர்தி செய்யப்பட்டுள்ளது என இவர்கள்  நம்புகின்றனர். 

ஆனால் 1948 ஆம் ஆண்டில் டி.எஸ்.சேனாநாயகவினால் கொண்டவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அதுதான் செல்லுபடியாகும் சட்டமாகும். 

எமது நாட்டின் அல்லது வேறு எந்தவொரு நாட்டின் பிரஜையும் அமெரிக்க பிரஜையாக மாறுவதென்றால் அமெரிக்க சட்டமான  1952 ஆம் ஆண்டு இயற்கையாகவே பிரஜாவுரிமை பெரும் சட்டத்திற்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்ய வேண்டும். 

அதில் இதற்கு முன்னர் எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாடுகளின்  சட்டங்களை முழுமையாக நிராகரித்து அமெரிக்க சட்டங்களை முழுமையாக பின்பற்றுவதுடன் அமெரிக்காவிற்கு எதிரான நெருக்கடி நிலையில் நாட்டிற்காக ஆயுதம் ஏந்தி போராடுவேன் என சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.

அதேபோல் இலங்கையை பொறுத்தவரை, அரசியல் அமைப்பில் இது நீக்கப்பட்டாலும் கூட பிரஜாவுரிமை சட்டத்தில், யாரேனும் ஒரு நபர், இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டு பிரஜாவுரிமையை பெற்றிருந்தால் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒரு நபர் உலகில் எந்தவொரு இராச்சியத்திலும் சத்தியப்பிரமாணம்  செய்திருந்தால் அன்றில் இருந்து குறித்த நபரின் பிரஜாவுரிமை இந்த நாட்டில் நீக்கப்படும் என கூறுகின்றது. 

ஆகவே இதற்கு அமைய பஷில் ராஜபக்ஷவினால் இந்த நாட்டில் அமைச்சுப்பதவியை மட்டுமல்ல எந்தவொரு அரச பணியில் கூட ஈடுபட முடியாது. 

இந்நிலையில் அவரின் எந்தவொரு பதவியும் செல்லுபடியாகாது. இந்த விவகாரம் குறித்து நான்  வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளேன். 

ஜனவரி 12 ஆம் திகதி இது விசாரணைக்கு எடுக்கப்படும். ஆகவே சாதாரண அரச  பணியில் கூட ஈடுபட முடியாத ஒரு நபரை அமைச்சராக நியமிப்பதோ அல்லது பிரதமராக்குவதோ நாட்டின் சட்டத்திற்கு அமைய முரணானது. சட்ட முரணான செயற்பாடுகளையே இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.