பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம் உள்ளதால் நாட்டு மக்கள் நிர்க்கதியாகியுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நாடு பாரிய நிதி நெருக்கடியை தற்போது எதிர்க்கொண்டுள்ளது. தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிர்வாக கொள்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடையாது. சிறந்தவர்களின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதில்லை.

நாடு நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையுள்ளதால் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் பெறும் சிரமங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு காலையில் இருந்து வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொது மக்கள் அன்றாட வாழ்க்கையினை கடத்துவதற்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது குடும்பத்தாரை காண அமெரிக்கா சென்றுள்ளார்.

மறுபுறம் பல அமைச்சர்கள் விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம் உள்ள காரணத்தினால் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளார்கள்.