மட்டக்களப்பு- கல்லடி, உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவரை இடமாற்றம்செய்யுமாறு கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை பழைய மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் குறித்த பாடசாலையின் ஆசிரியருமான பொ.உதயரூபனை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இடமாற்றக்கோரும் ஆசிரியர் மீது 41 குற்றச்சாட்டுகள் திணைக்களத்தினால் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடமாற்றுவதற்கான நடவடிக்கைகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
இதனையடுத்து பல குழப்பமான செயற்பாடுகளை குறித்த ஆசிரியர் மேற்கொள்வதினால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிக்கப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது பாடசாலைக்கு வருகைதந்த ஆசிரியர்களுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டதுடன் முரண்பாடுகள் ஏற்பட்டதனால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களை தாக்கமுற்பட்டதாகக் கூறி ஆசிரியர்கள் சிலரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.