யுகதனவி மின்நிலையம் தொடர்பிலான ஒப்பந்தம் முறையற்றதாகும் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் பகிரங்கப்படுத்தியுள்ளோம். மனசாட்சிக்கு அமைய செயற்பட்ட காரணத்தினால் அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகியதன் பின்னர் அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சரவை அனுமதியுடன் முறையாக கைச்சாத்திடப்படவுமில்லை. ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தப்படவுமில்லை என்பதை அமைச்சரவை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நாட்டு மக்களுக்கும், நீதிமன்றிற்கும் அறிவித்தோம்.

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் போது அமைச்சு பதவிகளை இழக்க நேரிடும் என்பதை நன்கு அறிவோம். அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மனசாட்சிக்கமைய நாட்டுக்காக செயற்பட வேண்டும் என்ற காரணத்தினால் யுகதனவி விவகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

மனசாட்சிக்கமைய செயற்பட்டுள்ள காரணத்தினால் அமைச்சு பதவிகளை துறக்க வேண்டிய அவசியம் கிடையாது. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பினை மீறியுள்ளோம் என ஜனாதிபதி கருதினால் எம்மை தாராளமாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கலாம். அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மனசாட்சிக்கமைய செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் முறையற்ற வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சர்களான உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தொடர்ச்சியாக கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை வலுவற்றதாக்குமாறு கோரி பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்களாக உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கர, விமல் வீரவன்ச ஆகியோர் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு சார்பாக உயர்நீதிமன்றிற்கு சமர்ப்பித்துள்ள சத்தியகடதாசி அரசியலமைப்பிற்கு முரணானது என சட்டமாதிபர் மனுக்களை பரிசீலனை செய்யும் ஜவர் கொண்ட பூரண நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த 17 ஆம் திகதி  சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.