நான்கு வருடங்களுக்கு முன்
எனது ஆரம்ப சுகாதார நிலையப் பணியில் நிகழ்ந்த உண்மை சம்பவம் ஒன்று

பலரும் பயன் பெற பகிர்கிறேன்

அன்றைய தினம் புறநோயாளிகள் பிரிவில் உள்ள நோயாளிகளை வழக்கம் போல பார்த்துக்கொண்டு இருந்தேன்.

இப்போது வளர் இளம் பருவத்தில் இருந்த பெண்ணொருத்தி என்னிடம் தனக்கு பீரியட்ஸ்/ மாதவிடாய் கடந்த இரண்டு மாதங்களாக வரவில்லை என்று தெரிவித்தாள்

கூட அவளது பெற்றோரை அழைக்காமல் வகுப்பு தோழியுடன் வந்திருந்தாள்

கடைசியாக மாதவிடாய் ஆன தேதி குறிக்கப்பட்டது.
தைராய்டு நோய் இல்லை.
உயரத்துக்கு ஏற்ற எடை.
உடல் பருமன் இல்லை.
கருமுட்டைநீர்க்கட்டி நோய் கிடையாது.

ஏன்.. அம்மா கூட வரவில்லை? என்று கேட்டதற்கு

அம்மா.கூலித்தொழிலாளி ..
வேலைக்கு சென்று விட்டதாக தெரிவித்தாள்

எனது மருத்துவப் புத்தகங்களில் படித்தது கண்முன் வந்து சென்றது
” இனப்பெருக்க வயதில் இருக்கும் பெண்ணுக்கு மாதவிடாய் சரியாக வரவில்லை என்றால் முதலில் நாம் “இல்லை” என்று நிரூபிக்க வேண்டியது. அவள் “கர்ப்பம் அடையவில்லை” என்பதைத்தான். “

“Any secondary amenorrhoea in a teenage girl .. pregnancy should be rule out”

ஆனால் இந்த விசயத்தை அவளிடம் கூறினால்

ஒன்று அவள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுவாள். கருவை கலைக்காமல் வளர் இளம் பருவத்தில் கர்ப்பிணியாகி விடுவாள். ஏற்கனவே மிகவும் மெலிந்து காணப்பட்ட அவள் கர்ப்பவதியாக தொடர்வது அவளது உயிருக்கு ஆபத்து

இரண்டு
வேறெங்காவது சட்டத்துக்கு புறம்பான போலிகளிடம் சென்று தவறான முறையில் கருக்கலைப்பு செய்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளால் அவள் இறக்க வாய்ப்புள்ளது.

மூன்று
ஏதுமறியாத ஒரு பெண் பிள்ளையிடம் கர்ப்ப்ம் குறித்தெல்லாம் பேசுவதை யாரும் விரும்பமாட்டார்கள். அவளது பெற்றோரே கூட அதை விரும்ப மாட்டார்கள். காரணம் அவள் மீது அளவு கடந்த நம்பிக்கை வுத்திருப்பார்கள் . அதனால் இந்த முடிவு எனக்கு எதிராக சென்று விட வாய்ப்பு உள்ளது.

நான்கு.

அவள் கர்ப்பிணியாக இல்லை என்று பரிசோதனை முடிவு வந்து விட்டால்
நான் அசடு வழிந்து கொண்டு எனது தவறை ஏற்றுக்கொண்டு அடுத்த நோயாளியைப் பார்க்க வேண்டும்

எனக்கு உடனே பொரிதட்டியது
சந்தேகத்தின் பலனை சாதகத்தை( Benefit of Doubt should go in favour of patient) எப்போதும் நோயாளிக்குத் தான் தர வேண்டும் என்பது மருத்துவத்துறையில் உள்ள வழக்கம்.

உடனே எனது மேல்நிலை மருத்துவ அலுவலரின் அறைக்குச் சென்று இந்த பெண்ணுக்கு அவளுக்கு தெரியாமல் சிறுநீரில் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள அனுமதி வாங்கினேன்.

உடனே வட்டார மருத்துவ அலுவலரும் அனுமதி வழங்கினார்.

அந்த பெண்ணை ரத்த அழுத்தம் பார்க்க செவிலியரிடம் அனுப்பி விட்டேன்.
அந்த வரிசையில் அவர் ரத்த அழுத்தம் பார்த்து வரும் நேரத்தில்
நேராக ஆய்வக நுட்புநரிடம் சென்று நான் இந்த பெண்ணுக்கு கர்ப்ப பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கிறேன். ஆனால் அவள் அதற்குத்தான் சிறுநீர் தருகிறாள் என்று அவளுக்கு தெரியாது. வேறு வழியில்லை. அதை அவ்வாறே ரகசியமாக வைத்திருக்கக் கூறினேன்.
அவரும் ஆமோதித்தார்.

ரத்த அழுத்தம் பார்த்து வந்த அந்த பெண்ணுக்கு இரும்புச்சத்து சர்க்கரை பார்க்க ரத்தம் / சிறுநீர் பரிசோதனை செய்து வர அறிவுறுத்தினேன்.

சிறுநீர் பரிசோதனை கொடுத்து விட்டு வெளியே அமர்ந்து இருந்தார்.

ஆய்வக நுட்புனர் என்னிடம் சிறிது நேரத்தில் இரண்டு கோடுகள் கொண்ட யூரின் ப்ரக்னன்சி கார்டுடன் பதட்டத்துடன் வந்தார்.

ஆம்..அவரது பதட்டத்துக்கு காரணம் அந்த பெண்ணுக்கு வயது 14 என்பதே.

என்னை பாராட்டினார்..
“சார்.. எப்டி சார்..கண்டுபிடிச்சீங்க?”என்று கேட்டார்.

“இப்ப அது முக்கியம் இல்ல. அந்த பொன்னு வெளியே உக்காந்துருக்கானு பாருங்க “

அமர்ந்திருந்த பிள்ளையை ஆய்வக நுட்புநர் அழைத்து வந்தார்.

அந்த பிள்ளை என்னிடம்
எவ்வித பதட்டமும் இல்லாமல்
தனக்கு தைராய்டு நோய் இல்லையே சார்..
என்ன சார்.. பிரச்சனை? என்று கேட்கிறாள்

அவளது பதட்டமில்லாத அணுகுமுறை பார்த்து,எனக்கு மீண்டும் ஒரு முறை சந்தேகம் வந்துவிட்டது.

மீண்டும் அவளை வெளியே அமர வைத்துவிட்டு , ஆய்வக நுட்புனரை இன்னொரு புதிய கார்டு மூலம் கர்ப்ப பரிசோதனை செய்யுங்கள் என்று கூறினேன்.

அவரும் பரிசோதனை செய்து மீண்டும் பாசிடிவ் தான் சார் என்று கூறவே எனக்கு நிலைமையின் தன்மை புரிந்தது.

இரண்டு வாய்ப்புகள்

அந்த பெண் குழந்தையை யாரோ ஒருவர் தவறாக பயன்படுத்தி வந்திருக்கிறார்.
அந்த பெண் குழந்தைக்கு தன்னுடன் உறவு கொள்பவரால் தான் கர்ப்பம் ஆவோம் என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு

அல்லது

அந்த பெண்ணுக்கு அத்தனையும் தெரியும். அதனால் தான் வசதியாக தனது தாயை விட்டு விட்டு தாய்க்கு தெரியாமல் தனது வகுப்புத் தோழியுடன் மட்டும் வந்திருக்கிறாள்.

இப்படி இரண்டு விதமாக யோசித்துக்கொண்டே இருந்தேன்.
எனக்கு முதல் வாய்ப்பு தான் அதிகம் இருக்கும் என்று பட்டது.

சரி.. என்னவோ இப்போதைக்கு இந்த பெண்ணிடம் நாம் கண்டறிந்ததை கூறுவது சரியாகாது என்று மே

இவளது தாயிடம் தந்தையிடம் கூறுவது தான் சரி என்று அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்

நான் அவளிடம் கூறாமல் இருந்ததற்கு

காரணம் ஒன்று

நான் நினைத்த முதல் காரணமாக இருந்தால்
இது அவளுக்கே தெரியாமல் நடந்த விசயமாக இருக்கலாம். இது அவளை பதட்டம் அடைய வைக்கும். மேலும் அவள் கூட வந்திருந்த தோழிக்கும் விசயம் தெரிந்து விடும். இது நோயாளியின் ரகசியக்காப்புக்கு எதிராகச் சென்றுவிடும். வளர் இளம் பருவத்தில் இருக்கும் அவள் இந்த செய்தியில் பெரும் பதட்டத்துக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

நான் நினைத்த இரண்டாவது காரணமாக இருந்தால்.

அவள் வீட்டுக்கு செல்வதற்கு முன் எங்காவது போலி ஆட்களிடம் சென்று சட்டம் அங்கீகரிக்காத முறையில் அபார்சன் செய்து கொண்டு அதனால் ஏற்படும் உதிரப்போக்கு/ கிருமித் தொற்று போன்ற காரணங்களால் இறக்க வாய்ப்புள்ளது. இப்போது எத்தனை மாதங்கள் கர்ப்பம் என்று கூட சரியாகத் தெரியாது..இந்த சூழ்நிலையில் நான் அவளை கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறுவதை விட அவளை அவள் போக்கில் விட்டு அவளது பெற்றோருக்கு தகவல் தருவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன்

அவளை வீட்டுக்கு அனுப்பி விட்டு
அவள் புறநோயாளிச்சீட்டு பதிவு செய்யக்கொடுத்த அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் .

அப்படி ஒரு எண் இல்லை என்று வந்தது.
அவள் கொடுத்த முகவரி கொண்டு கிராம சுகாதார செவிலியரை விசாரிக்க உடனே கூறினேன்.
அவள் கொடுத்த முகவரியில் அப்படி ஒரு நபரே இல்லை என்று தகவல் வந்தது.

அதற்கடுத்து வந்த சில நாட்கள் எனக்கு மிகவும் பதட்டமானவையாக இருந்தன.

அந்த பெண்ணை எப்படி கண்டறிவது .
என்று அவளது அடையாளங்களை மட்டும் எனது கிராம சுகாதார செவிலியர்கள் அனைவருக்கும் கூறி அவளது இருப்பிடத்தை கண்டறியக் கூறினேன்.

மூன்று நாட்களுக்குப் பிறகும் அவளது இருப்பிடத்தை அறிய முடியவில்லை

தற்செயலாக புறநோயாளிகள் பிரிவை விட்டு வெளியே வந்தேன்.

அப்போது வழக்கமாக எப்போதும் தினசரி மருத்துவமனைக்கு வரும் தாத்தா வெளியே அமர்ந்திருந்தார்.

எனக்கு இருந்த நினைவில் அந்த பெண் வந்திருந்த அன்றும் அவர் அந்த பெண்ணுக்கு அடுத்த ஆளாக வரிசையில் நின்று கொண்டிருந்தார்..

அந்த பெண்ணை விசாரிக்கும் போது நான் அதிக நேரம் எடுத்துக்கொண்டதை அடுத்த வரிசையில் நின்று கொண்டிருந்த அவர் கடுமையான முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது சத்தமாகவே புலம்பிக்கொண்டிருந்தார்.

நான் கூட
” ஏன் தாத்தா.. டெய்லியும் தான் வரீங்க..இந்த பிள்ளைக்கு என்ன நோய்னு பாக்கற வரைக்குமா உங்களுக்கு பொறுமை இல்லை.”
என்று நான் கூற

அவர் உடனே
” ஆமா ஆமா சார்.. நல்லா பாருங்க..எங்க ஊர்புள்ள தான்..” என்று கூறியது

சட்டென நினைவுக்கு வந்தது.

ஓ..இறைவா
நன்றி. என்று தோன்றியது.

இப்போது இன்னொரு சட்ட சிக்கல் இருக்கிறது.
நேராக தாத்தாவிடம் அந்த பெண்ணின் வீடு குறித்து கேட்க முடியாது. காரணம் கிராமங்களுக்குள் எப்போதும் எதையாவது பற்றி புரளி பரவிக்கொண்டே இருக்கும்

எனவே அவரை வழக்கம் போல அவரது பேருந்தில் போக விட்டு.
எனது மருத்துவமனை ஊழியர் ஒருவரை அவருக்கு தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்து அவரது ஊரை அறியச்சொன்னேன்.

அவரது ஊர் தெரிந்தது.
பிறகு அந்த ஊர் கிராம சுகாதார செவிலியரிடம் இருந்து வளர் இளம் பெண்கள் லிஸ்ட் வாங்கினேன்.

அதில் அந்த பெண்ணின் பெயரைத் தேடினேன்.

இல்லை..
அந்தப் பெண் பெயரையும் மறைத்துக்கொடுத்திருக்கிறாள்.

அந்த கிராமத்து வளர் இளம் பெண்கள் அதிகம் படிக்கும் அரசுப் பள்ளி எது என்று அறிந்தால் கண்டறிய முடியும்.
என்று

அந்த பள்ளிக்குச் சென்று
ஒரு சிறிய கேம்ப் நடத்தி கடைசியாக அவளை கண்டறிந்தேன்.

அவளது பெற்றோர் குறித்த முறையான ஆவணங்களை அவளது ஆசிரியரிடம் பெற்றுக் கொண்டேன்.
ஆசிரியரிடம் அவள் குறித்த ரகசியத்தை வெளியே கூறவில்லை.
இது குறித்த சந்தேகம் வராமல் இருக்க ஒரே நேரத்தில் பல பெண்களின் பெற்றோர் மற்றும் முகவரி பெறப்பட்டது.

அந்த பள்ளியில் அவளை சந்திக்கும் போது கூட அவள் என்னை முன்பின் அறியாதவள் போன்றே காட்டிக்கொண்டாள்

பிறகு அவளது பெற்றோரை அழைத்து விளக்கமாக கூறி
அவர்கள் இதுகுறித்த முடிவு எடுக்க அறிவுரை வழங்கப்பட்டது.

அந்த பெண் பிள்ளை மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சட்டப்பூர்வமான அபார்சன் செய்யப்பட்டது.

அவளை உபயோகித்து வந்தவன்..அவளது தாயின் உடன்பிறந்த சகோதரன்..அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது. இருப்பினும் இவளை ஆசைக்கு வளைத்து உபயோகித்துள்ளான். அவன் மீது அவரது பெற்றோர்கள் சட்ட ரீதியான புகார் அளித்து கைது செய்யப்பட்டான்.

இவ்வாறு சாதாரணமாக தொடங்கிய விசயம்
பெரிய சங்கிலித்தொடராக மாறி சுமார் ஒரு வாரம் எனது ஊன் உறக்கத்தை மறக்கச்செய்தது.
அவளைக் கண்டறிந்து முறையான மருத்துவ சிகிச்சை அளித்து அவளை வேறு வழிகளில் தடம்புறளாமல் பாதுகாத்தது என்றும் என் வாழ்வில் மறக்க இயலாத தருணம்.

இறைவனுக்கே புகழனைத்தும்

இந்த பதிவின் முக்கியமான நோக்கம்.
இனப்பெருக்க வயதில் இருக்கும் ஒரு பெண் மாதவிடாய் வரவில்லை என்று சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் கூறினால் அவர் திருமணம் ஆனவர் ஆகாதவர் என்று பாகுபாடு பார்க்காமல் அவர் கர்ப்பிணியாக இருக்கிறாரா ? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.

இக்காலத்தில் பிசிஓடி மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் மாதவிடாய் கோளாறு மற்றும் தள்ளிப்போவது பல பெண்களிடம் காணப்படும் பிரச்சனையாக உள்ளது.

எனினும் கடந்த பல மாதங்களாக சரியாக நிகழ்ந்த மாதவிடாய் திடீரென தள்ளிப்போவது என்பதை சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது.

கட்டாயம் கர்ப்பமடைந்து இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்
ஆனால் அதை மிகவும் எச்சரிக்கையாக செய்ய வேண்டும் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம்

பல நேரங்களில் கர்ப்பமடைந்த விசயம் வளர்இளம் பெண்ணுக்கே தெரியாது. இதன் மூலம் அவளை தனது சுய இச்சைக்கு உபயோகித்து வரும் காமுகர்களைக் கூட கண்டறிய முடியும். ஒரு இளம்பெண்ணை இந்த தீய அனுபவங்களில் இருந்தும் வேண்டாத கர்ப்பத்தில் இருந்தும் பாதுகாக்க முடியும்.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை