மலேசியாவில் படகு மூழ்கியதில் 11 பேர் பலி – 25 பேரை காணவில்லை

மலேசியாவின் ஜோகூர் மாநிலம், கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள கடற்கரை அருகே தஞ்சோங் பலாவ் கடற்பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 11 இந்தோனீசியர்கள் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் உயிருடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

50 பேருடன் சென்றுகொண்டு இருந்ததாக நம்பப்படும் அந்தப் படகு மூழ்கிய நிலையில் புதன்கிழமை (டிசம்பர் 15) காலை 7.40 மணியளவில் காணப்பட்டதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை பேச்சாளர் கூறினார்.

உயிரிழந்த 11 பேரில் நால்வர் பெண்கள் என்றும் காணாமல் போன 25 பேர் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேடி மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக அந்தப் பேச்சாளர் கூறினார்.

மலேசிய கடற்படை உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. படகுக்குள் யாரும் சிக்கியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய அதனை மீட்பதற்கான பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

மலேசிய கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைய படகு மூலம் குடியேறிகள் வந்ததாக நம்பப்படுகிறது என்று மலேசிய கடல்துறை அமலாக்க முகவை இயக்குநர் நூருல் ஹிஸாம் ஸக்கரியா தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக படகு மூழ்கி இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

சம்பவம் பற்றி அதிகாலை 4.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணியில் விமானமும் சுற்றுக்காவல் படகுகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் சொன்னார்.