மலேசியாவில் கடந்த சனிக்கிழமை முதல் பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 23 பேர் சிலாங்கூர் பகுதியையும், 11 பேர் பகாங் பகுதியையும் சேர்ந்தவர்கள் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் கடந்த சனிக்கிழமை முதல் இடைவிடாது கொட்டும் மழையால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தலைநகர் கோலாலம்பூர் அமைந்துள்ள மற்றும் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள சிலாங்கூர் மாகாணம் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. 8 மாகாணங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சுமார் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து இடைத்தங்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் வடியாத நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது.

இந்நிலையில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளதாக மலேசிய அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வெள்ளத்தில் சிக்கிய பலர் காணாமல் போயுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.