கடந்த 19-ஆம் தேதி கரூரை சேர்ந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவர் டைரியில் தற்கொலைக்கான காரணத்தையும் எழுதி வைத்திருந்தார்.

அதில் பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும். எனக்கு வாழ்வதற்கு மிகவும் ஆசை, ஆனால் என்னால் முடியவில்லை. பெரியாளாகி நிறைய பேருக்கு உதவி செய்யவும் ஆசை. ஆனால் உங்கள் எல்லாரையும் விட்டு நான் போகிறேன். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் நான் இந்த உலகை விட்டு போகிறேன். எனக்கு தொல்லை கொடுத்தவனை பற்றி கூறுவதற்கு கூட பயமாக இருக்கிறது என அவர் கைப்பட எழுதி வைத்திருந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவரது தாய் பேட்டி அளித்திருந்தார்.


அதில் பள்ளியில் உள்ள வேதியியல் ஆசிரியர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தனது மகள் அந்த பாட புத்தகத்தில் சில சந்தேக குறியீடுகளை வரைந்துள்ளதாகவும், அந்த பாடப்பிரிவின் வகுப்பை கவனிக்கவே தனது மகளுக்கு பிடிக்காது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் பள்ளியில்தான் தனது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததுள்ளது என தெரிவித்திருந்தார். இப்படி அனைவரது கவனமும் வேதியல் ஆசிரியர் பக்கம் திரும்பியது. இன் நிலையில்..

மேலும் பள்ளியில் அந்த மாணவியின் தாய், உறவினர்களை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கரூரில் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று பள்ளியில் தனது தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு என கூறி அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சி துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது குடும்பத்தினர் கரூரில் இருக்கும் போது இவர் ஏன் திருச்சியில் உள்ள வீட்டிற்கு சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.