01.01.2022 நேற்று மாலை 5.30 மணியவில் கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வற்றாப்பளை பகுதியில் இருந்து கேப்பாபுலவு பகுதிநோக்கு உந்துருளி ஒன்றில் பயணித்த மூவரே இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து டிப்பர் வாகன சாரதி முள்ளியவளை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
விபத்தின்போது உந்துருளியில் பயணித்த 48 அகவையுடைய பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து ,அதே இடத்தினை சேர்ந்த 17 அகவையுடைய சூரியகுமார் கரிதாஸ் என்பவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 22 அகவையுடைய சண்முகம் நிறோஜன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவத்தினை தொடர்ந்து காவற்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
டிப்பர் வகானத்தினை அந்த இடத்தில் விட்டு எடுத்து செல்லமுடியாதவாறு மக்கள் ஒன்று கூடியதால் பதட்ட நிலை ஏற்பட்டு காவற்துறையினருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு மேலதிக காவற்துறை வரவழைக்கப்பட்ட நிலையில் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு காவற்துறையினர் விபத்து தொடர்பில் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.