ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயாரென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார். 

இதுவரை காலமாக அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் ஆட்சி மாற்றத்தை செய்தனர், இன்று பொருளாதார நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளுமே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளினாலும் இனியும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. 

எனவே இன்று மாற்று அணியொன்றும், மாற்று பொருளாதார திட்டமொன்றும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான சரியான தருணம் இதுவாகும். 

மக்கள் இப்போது சரியான அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டும். இதுவரை காலமாக பிரதான இரண்டு கட்சிகள் உருவாக்கிய பொய்களில் ஏமாற்றப்பட்டே மக்கள் ஆட்சியை உருவாக்கியுள்ளனர். ஆனால் இன்று அந்த பொய்களை மக்கள் கேட்க தயாராக இல்லை.

இந்த நாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றதே தவிர தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் அல்ல. 2005  ஆம் ஆண்டில் நாம் எடுத்த சில தீர்மானங்கள் தாமதாகியிருந்தால் இந்த நாட்டில் தமிழ் சிங்கள யுத்தமொன்று உருவாகியிருக்கும். 

நாட்டில் இன்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது. இன நல்லிணக்கத்தை உருவாக்கி ஆட்சியை கொண்டுசெல்லும் மனநிலையில் இந்த ஆட்சியாளர்கள் இல்லை. 

எனவே தான் சகல மக்களின் மனங்களையும் வெற்றிகொண்டு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப நாம் முயற்சிக்கின்றோம். அதன் மூலமாகவே நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.