மாலை நேர சின்ன பசிக்கும கோதுமை மாவினைப் பயன்படுத்தி சுவையான சமோசா செய்து ருசிக்கலாம்.

அதை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 1. கோதுமை மாவு – 500 கிராம்
 2. உப்பு – தேவையான அளவு
 3. உருளைக் கிழங்கு – 200 கிராம்
 4. கேரட் – 100 கிராம்
 5. பெரிய வெங்காயம் – 300 கிராம்
 6. இஞ்சி – சுண்டு விரல் அளவு
 7. வெள்ளைப் பூண்டு – 4 பற்கள்
 8. மசாலா பொடி – 2 ஸ்பூன்
 9. கரம் மசாலா பொடி – ¾ ஸ்பூன்
 10. மஞ்சள் பொடி – ¼ ஸ்பூன்
 11. மல்லி இலை – 25 கிராம் கடலை
 12. எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவு
 13. நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
 14. கடுகு – ¼ ஸ்பூன்
 15. சீரகம் – ¼ ஸ்பூன்
 16. கறிவேப்பிலை – 5 கீற்று

செய்முறை

கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் திரட்டிக் கொள்ளவும்.

ஈரத்துணியால் பிசைந்த மாவினை மூடி அரைமணி நேரம் வைத்திருக்கவும்.  

உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றை பொடியான சதுரத் துண்டுகளாக வெட்டவும். பெரிய வெங்காயத்தை மெல்லிதாக நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

இஞ்சி, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக வெட்டிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். சிறிதளவு கோதுமை மாவினை எடுத்துக் கொண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசைபோல் கலக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலையைச் சேர்த்து தாளிதம் செய்யவும். பின்னர் அதில் பெரிய வெங்காயத்தைப் போட்டு இருநிமிடங்கள் வதக்கவும்.

அதனுடன் கேரட் சேர்த்து வதக்கி, இருநிமிடங்கள் கழித்து, உருளைக்கிழங்கினைப் போட்டு வதக்கவும்.

இருநிமிடங்கள் கழித்து மசாலா பொடி சேர்த்து ஒருசேரக் கிளறி, அதனுடன் கரம்மசாலா பொடி சேர்த்து ஒருநிமிடம் கழித்து, இஞ்சிபூண்டு விழுதினைச் சேர்த்து கிளறவும்.

பின்னர் தேவையான உப்பு மற்றும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி, அடுப்பினை மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு மூன்று நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். பின்னர் கலவையை ஒருசேரக் கிளறி கெட்டியானதை உறுதிப்படுத்திக் கொண்டு, மல்லி இலையைச் சேர்த்து கிளறவும்.

பிசைந்த சப்பாத்தி மாவினை சிறு உருண்டகளாக்கவும். சிறுஉருண்டையை கோதுமை மாவினைப் பயன்படுத்தி, மிகவும் மெல்லிய வட்ட சப்பாத்தியாக விரிக்கவும். இவ்வாறாக எல்லா உருண்டகளையும் மெல்லிய சப்பாத்திகளாக விரிக்கவும்.

தோசை கல்லில் விரித்த சப்பாத்திகளை, எண்ணெய் ஊற்றாமல் மேற்புறம் லேசாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு சப்பாத்தியையும் மூன்று துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய துண்டினை கூம்பாக மடித்து, கோதுமை மாவு பசையினை வைத்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.   

கூம்பிற்குள் வதக்கிய கலவையை வைத்து,ஓரங்களில் கோதுமை மாவு பசையினைத் தடவி மூடிக்கொள்ளவும். இவ்வாறாக எல்லாவற்றையும் செய்யவும்.  

வாணலியை அடுப்பில் வைத்து, கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களைப் பொரித்துக் கொள்ளவும்.