யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் மேலும் இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பகிரங்க விளம்பரத்துக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்த யாழ். போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் உளநலப் பேராசியராகவும், திறமை அடிப்படையிலான உள்ளகப் பதவியுயர்வுக்காக விண்ணப்பித்திருந்த இரசாயனவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசலிங்கம் சசிகேஸ் இரசாயனவியலில் பேராசிரியராகவும் பதவி வழங்கப்படுவதற்கே பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று 29 ஆம் திகதி புதன்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபங்களுக்கமைவான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்த கலாநிதி க.சசிகேஸ், உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் ஆகியோரின் பதவியுயர்வுக் குறிப்புகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, பேரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றும் கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் 2021.01.15 முதல் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் முதல் தொகுதி மாணவர்களில் ஒருவராகத் தமிழ் விசேட கற்கை நெறியில் கல்வி கற்று விசேட இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார்.