நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகின்றமையினால், பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹந்துன்நெத்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் நடவடிக்கையினால் யுகதானவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை எரிவாயு தொடர்பான விபத்துக்களால் பொதுமக்களும் ஆபத்தில் உள்ளனர் எனவும் ஹந்துன்நெத்தி கவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகள்  ஊடாக  தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்த ஹந்துன்நெத்தி, இது போன்ற நேரத்தில் பொறுப்பான நிதி அமைச்சர் நாட்டில் இல்லை என்றும் கூறியுள்ளார்.