தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த இளம் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், 10 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 370 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் – 128.47. கிட்டத்தட்ட 9 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளும் எடுத்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று மூன்று ஆட்டங்களிலும் விளையாடினார். இந்தூரில் வசிக்கும் 26 வயது வெங்கடேஷ் ஐயர், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், அடுத்ததாக நடைபெற்று வரும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியிலும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். இன்ஸ்டகிராமில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடி நேற்று 151 ரன்கள் குவித்து அசத்தினார். ரஜினி பிறந்த நாள் அன்று சதமடித்ததால், சதத்தை ரஜினிக்கு அர்ப்பணிக்கும் வகையில் அவரைப் போலவே சல்யூட் அடித்தும் கண்ணாடியை ஸ்டைலாக மாட்டுவது போலவும் சைகை காண்பித்தார். இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். அதில் பல பிரபலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ள ரஜினி, (கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ந்த) சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கும் நன்றி என தனது அறிக்கையில் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வெங்கடேஷ் ஐயருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.