ராஜபக்ஷ் அரசாங்கத்தை துரத்தி அடித்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2021 ஆம் வருடம் நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், சமூகம் என அனைத்து துறைகளும் பாரிய கஷ்ட நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தன. அதேநிலையிலேயே  புதிய வருடம் பிறந்திருக்கின்றது. அதனால் இந்த வருடமும்  பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்படும் நிலையே இருக்கின்றது. 

ஏனெனில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் கேஸ், பால்மா மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் இருக்கவேண்டிய நிலையே தொடர்கின்றது. 

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இல்லை. அதனால் பங்களாதேஷிடம் கடன் வாங்கிய இந்த அரசாங்கம் அடுத்த கட்டமாக ஆப்கானிஸ்தானிடம் கடன் வாங்கும் நிலையே இருக்கின்றது. 

அதனால் 2022 ஆம் வருடமும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படவேண்டிய வருடமாகவே அமையும் நிலையே இருக்கின்றது.

2015இல் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படும்போதும் நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியடைந்திருந்தது. சர்வதேச ரீதியில் எமது நாடு ஒதுக்கப்பட்டிருந்தது. ஜீ.எஸ்.பி. சலுகை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் நாட்டை மீட்டிக்கொள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு முடியுமாகியது. 

அதனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே முடியும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். 

எனவே இந்த அரசாங்கத்தை துறத்தியடித்து, ராஜபக்ஷ் ரெஜிமென்டில் இருந்து நாட்டை பாதுகாக்க, நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றுபடவேண்டிய காலம் வந்துள்ளது. அதற்கு தலைமை தாங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது. அதனால் எதிர்க்கட்சி உட்பட அரச விரோத கொள்கையுடைய அனைவரும் எம்முடன் அணிதிறள முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.