வடிவேலுவுடன் லண்டன் சென்று திரும்பிய இயக்குநர் சுராஜுக்கும் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகா் வடிவேலு, தற்போது சுராஜ் இயக்கத்தில் ´நாய் சேகா் ரிட்டா்ன்ஸ்´ என்ற படத்தில் நடித்து வருகிறாா். படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் பிரிட்டனுக்கு சென்றிருந்த வடிவேலு வியாழக்கிழமை சென்னை திரும்பினாா்.

விமான நிலையத்திலேயே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் லேசான தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டாா்.

அவரைத் தனிமைப்படுத்தி மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். அவா் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடிவேலுவுடன் லண்டன் சென்று திரும்பிய இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் குமரனுக்கு ஒமிக்ரோன் ஆரம்ப அறிகுறி உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.