யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையில் மாவீரர் நாளை நினைவேந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள தீருவிலுள்ள திடலில் மாவீரர் நாளை நினைவேந்துவதற்கு, வல்வெட்டித்துறை நகர சபையிடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த நகர சபை உறுப்பினர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைய சபை அமர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில், மாவீரர் தினத்தை நினைவேந்தல் செய்வதற்கு, தீருவில் திடலில் அனுமதி வழங்க, சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார நடைமுறைகளைப் பேணி நினைவேந்தலை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்திடலில் ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்குப் பொலிஸாரின் அனுமதி பெறவேண்டும் எனவும், பூங்கா கட்டுமானங்களுக்குச் சேதமேற்படுத்தாது நினைவேந்தலை அனுஸ்டிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.