அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டிமேடு வடக்கு வயல் பகுதியான பள்ளப்பாமாங்கை துரிசில் ஏற்பட்ட வெள்ள நீரில் தவறி வீழ்ந்து விவசாயி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் இன்று (03) காலையில் இடம்பெற்றுள்ளதாக கோளாவில் பொலிசார் தெரிவித்தனர்.

புளியம்பத்தை கிராமத்தைச் சேர்ந்த 56 வயதுடைய கணபதி கிருபைராஜன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் பெய்துவரும் கடும் மழையில் சம்பவ தினமான இன்று காலை வேளாண்மை நடவடிக்கைக்காக வயலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வெள்ள நீர் வாய்க்காலில் நிரம்பி அதிகரித்ததையடுத்து அந்த வாய்க்காலின் துரிசில் இருந்த பலகையை அகற்ற முற்பட்டபோது தவறி துரிசில் கீழ் வீழ்ந்ததையடுத்து வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் இராணுவத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கோளாவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்றில் இருந்து கடும் மழை பெய்துவருவதால் அந்த வலயல் பகுதி வாக்கால்கள் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.